சங்கராபரணியில் குளிக்கச்சென்று மாயமான மாணவர்: மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குளிக்கச்சென்று மூழ்கிய மாணவர் சடலம் 3வது நாளான இன்று மீட்கப்பட்டது.

புதுச்சேரி வில்லியனூர் ஒதியன்பேட் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹென்றி லூர்துராஜ். தனியார் நிறுவன மேலாளர். இவரது மகன் லியோ ஆதித்யன் (16). ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவர். இவர் ஞாயிற்றுக் கிழமை தனது வகுப்பு நண்பர்கள் அந்தோணி, நிஷாந்த் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கராபரணி ஆறு செல்லிப்பட்டு அணைப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அந்தோணி, லியோ ஆதித்யன் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, இருவரும் ஆற்றின் சுழலில் சிக்கி மூழ்கியுள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து, அந்தோணியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கனூர் காவல் உதவி ஆய்வாளர் பிரியா தலைமையிலான காவலர்கள் நீரில் மூழ்கி மாயமான மாணவர் லியோ ஆதித்யனை தேடுதல் பணியைத் தொடங்கினர்.

ஆனால், நீரில் மூழ்கிய லியோ ஆதித்யனை எளிதில் மீட்க முடியவில்லை. அதனையடுத்து மாணவரை தேடும் பணியில் வில்லியனூர் தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரையில் தீவிரமாக ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. டிரோன் கேமிராவும், ரப்பர் படகிலும் தீவிரமாக தேடியும் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று செல்லிப்பட்டு பாலம் அருகே மணலுக்குள் புதைந்து இருந்த மாணவனின் உடலை மீட்டுக் குழுவினர் கண்டறிந்தனர். மாணவனின் உடலைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE