அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 145 பேர் ஆஜர்

By KU BUREAU

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் முதற்கட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 145 பேர் சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து மொத்தம் 2, 222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதற்கட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 150 பேர் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 145 பேர் ஆஜராகினர். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிட வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ள அறிவுறுத்தினார். இரண்டாம் கட்டமாக அடுத்த 150 பேருக்கு வரும் ஜன.6, 7, 8 ஆகிய தேதிகளில் ஆஜராக சம்மன் பிறப்பித்து விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE