ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் துணை முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக ரங்கராஜன் நரசிம்மன், யூடியூபர் ஃபெலிக்ஸ், இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் மீது மடம் சார்பில் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி (ஶ்ரீகார்யம்) சக்திவேல் ராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஜூன் 17-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆழ்வார்திருநகரி மற்றும் ஶ்ரீபெரும்புதூர் ஜீயர்களுடன் ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டார்.
அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்குச் சென்ற 3 ஜீயர்களுக்கு, உதயநிதி ஸ்டாலின் பாதபூஜை செய்ததாகவும், ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கு எதிராக ஜீயர்கள் நடந்து கொண்டதாகவும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை வீடியோவாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரெங்கராஜன் நரசிம்மன் என்பவரும், இந்துமத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் யூடியூபில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட், இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் பேசி வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
இந்த உண்மைக்கு மாறான தகவலை வைத்து மடத்துக்கு எதிராக சிலர் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மடத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மடத்தின் சொத்துகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரங்கராஜன் நரசிம்மன், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, மடத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» திருமாவளவனுக்கு திமுக எந்த அழுத்தமும் தரவில்லை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
» ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவிப்பு: இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறல்
இந்த புகாரின் அடிப்படையில் ரங்கராஜன் நரசிம்மன், ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகிய 3 பேர் மீது ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் ஶ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் ரங்கராஜன் நரசிம்மன் ஶ்ரீரங்கத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.