தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்று திமுக எந்தவிதமான அழுத்தமும் தரவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணி 25 சதவீதமும், மேலமடை சந்திப்பு மேம்பாலப் பணி 32 சதவீதமும் முடிவடைந்துள்ளன. 2 பாலங்களையும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக ‘நம்ம சாலை’ என்ற செயலி உள்ளது. இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
» ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவிப்பு: இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறல்
» உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மன அழுத்தம் அதிகம் இருந்தது: சொல்கிறார் இளம் சாம்பியன் குகேஷ்
தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்று திமுக எந்தவிதமான அழுத்தமும் தரவில்லை. யாரும் அழுத்தம் கொடுப்பதை திருமாவளவன் ஏற்க மாட்டார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இதுவரை 13.60 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,650 பேர் வருகின்றனர். நூலகத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி அரங்கு அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் சொந்த புத்தகங்களை வாசிப்பதற்கு ஏதுவாக தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சர் பி.மூர்த்தி, பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், ஆட்சியர் சங்கீதா மற்றும் அதி்காரிகள் உடனிருந்தனர்.