திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய கொலுசு திருகை அகற்றம்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் டிச.13-ம் தேதி கொலுசு திருகையை விழுங்கிவிட்டார். அச்சிறுவனை அவரது பெற்றோர் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், திருகை பெருமூச்சுக் குழாய்க்கு சென்று தங்கியது தெரியவந்தது. உடனே அச்சிறுவன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ச.குமரவேல், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் அண்ணாமலை, மயக்கவியல் துறை பேராசிரியர் செந்தில் குமார் மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர், அச்சறுவனின் பெரு மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த திருகையை, ரத்தப்போக்கு, மூச்சு விடுதல் சிரமம் இல்லாமல் ‘ரிஜெக்ட் ப்ராங்கோஸ்கோப்பி’ மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.

குழந்தைகள் உள்ள வீட்டில் தரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாப்பிடும்போது, டிவி பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக்கூடாது. இல்லையெனில் இதுபோன்ற அன்னிய பொருட்கள் குழந்தைகளின் வாய் வழியாக உடலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; குழந்தைகள் சாப்பிடும்போது கவனமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE