இளையராஜா சர்ச்சை முதல் சென்னைக்கு கனமழை வாய்ப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

இளையராஜா சர்ச்சை: நடந்தது என்ன? - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோருடன் இளையராஜா, ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது, வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று சின்ன ஜீயரிடம் கோயில் அர்ச்சகர். அதை இளையராஜாவிடம் சின்ன ஜீயர் கூறியதும், இளையராஜா அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் பரவி, ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் தரிசனம் செய்து விட்டு, மன நிறைவுடன் சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா சொல்வது என்ன? - தமிழக அரசின் அறநிலையத் துறை சார்பில், ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் அளித்த விளக்கத்தில், ‘ஆண்டாள் கோயில் கருவறையில் மூலவரும், அர்த்த மண்டத்தில் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே, இந்தத் திருக்கோயில் மரபுப்படி அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.

இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இது குறித்து சின்ன ஜீயர் விளக்கியபோது, அவரும் ஒப்புக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார். ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகிறார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை மீது அண்ணாமலை குற்றச்சாட்டு: ‘சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இலங்கை அதிபருக்கு வரவேற்பு: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ - முதல்வர் ஸ்டாலின் சாடல் - ‘நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பாஜக அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற அடாவடி முயற்சியை மேற்கொள்கிறது’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு’ - ‘மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்’ என்று இந்தியா - இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் சரமாரி தாக்கு: ‘நேருவின் குடும்பம் மற்றும் அதன் வாரிசுகளுக்கு உதவுவதற்காக அரசியல் சட்டத்தில் பெரிய திருத்தங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது’ என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். ‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்’ என்ற தலைப்பில் விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கிவைத்துப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், “வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டை மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அணுகுகிறேன்.

செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

ஜாகிர் உசேன் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி: நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹூசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஓர் உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்குக்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் மக்களைக் கவர்ந்தார். இதன் மூலம், அவர் இந்திய பாரம்பரிய மரபுகளை உலகளாவிய இசையுடன் இணைத்தார்.

இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக அவர் திகழ்ந்தார். அவரது தனித்துவமிக்க நிகழ்ச்சிகள், ஆத்மார்த்தமான பாடல்கள் தலைமுறை இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்களை ஊக்குவிக்க பங்களிக்கும்” என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையைப் பொறுத்தவரையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE