தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை ஓய்ந்து நேற்று வெயில் அடித்தது. தாமிரபரணி மற்றும் காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் வெகுவாக குறைந்தது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டாறுகள், ஓடைகள், கால்வாய்களிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் ஏரல் தரைப்பாலம் மற்றும் முக்காணி பாலங்களை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றதால் தூத்துக்குடி- திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து முடங்கியது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.
இரவு 9 மணி வரை மழை நீடித்தது. அதன் பிறகு மாவட்டத்தில் மழை படிப்படியாக குறைந்தது. நேற்று காலை முதல் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. சில நாட்களுக்கு பிறகு வெயில் தலைகாட்டியது. நேற்று பகல் முழுவதும் மிதமான வெயில் அடித்தது. இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையில், அது வெகுவாக குறைந்தது. நேற்று பிற்பகல் நிலவரப்படி ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி சுமார் 25 ஆயிரம் கன அடி தண்ணீரே சென்றது.
» 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» ஜாபர் சாதிக் கருப்பு பணத்தை வெள்ளையாக்க பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தினார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
போக்குவரத்து தொடக்கம்: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்ததால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள முக்காணி பாலத்தில் நேற்று காலை முதல் வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கியது. அதேநேரத்தில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் தொடர்ந்து செல்வதால் அந்த வழியாக மூன்றாவது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் உள்ள புன்னக்காயல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வெகுவாக குறைந்ததால் கரையோர கிராமங்களில் குடியிருப்புகள், வயல்வெளிகளில் புகுந்த மழை வெள்ளம் வேகமாக வடிந்து வருகிறது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். காட்டாறுகள், ஓடைகளிலும் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. உப்பாற்று ஓடையில் தண்ணீர் குறைந்ததால் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அத்திமரப்பட்டி, காலாங்கரை, முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பியது.
தூத்துக்குடி நகரம்: தூத்துக்குடி அருகே உள்ள செங்குளம் நிரம்பி உபரிநீர் அதிகப்படியாக வெளியேறியதால் சோரீஸ்புரம், அய்யனடைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த பகுதிகளிலும் நேற்று மழைநீர் வடிய தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது.
ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையம் தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. காட்டாற்று வெள்ளம் இந்த அலுவலகம் வழியாக கரைபுரண்டு ஓடுகிறது. இந்திய உணவுக் கழக குடோன் வளாகத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனால் சேமிப்பு கிடங்குகளுக்குள் தண்ணீர் செல்லாததால் தானியங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளுக்குள் முடக்கம்: தூத்துக்குடி மாநகரின் மேற்கு பகுதிகளான ஆசீர்வாத நகர், செல்வகாமாட்சி நகர், பசும்பென் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்பதால், இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.
இதேபோல் தூத்துக்குடி 3-ம் மைல்- மடத்தூர் சாலையை கடந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் இந்த வழியாக மக்கள் சிரமத்துடன் செல்கின்றனர். தபால்தந்தி காலனி, ராஜீவ் நகர், ராஜகோபால் நகர், பால்பாண்டி நகர், கோக்கூர், ஆசிரியர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் இப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் ஆகியோரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணிகளை முடுக்கிவிட்டனர்.
குளங்களில் தண்ணீர் குறைவு: கடந்த ஆண்டு பெரும்பாலான குளங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரத்தில் உள்ள அனைத்து கிராமங்களும், வயல்வெளிகளும் தண்ணீரில் மூழ்கி கடும் பாதிப்பை சந்தித்தன. இதனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளங்கள் நிரம்புவதற்கு முன்னதாகவே, பெரும்பாலான குளங்களுக்கு வந்த தண்ணீர் கடந்த இரு தினங்களாக அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதனால் பெரிய ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு தூத்துக்குடி மாநகரம் மற்றும் பல கிராமங்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பியுள்ளன. இதேநேரத்தில் பெரும்பாலான குளங்களில் தண்ணீர் போதுமான அளவில் இல்லாததால், மழையின் அளவு மற்றும் வரும் நாட்களின் வானிலையை பொறுத்து குளங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.