தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்திற்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக் கூடும் என்றும், மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக தெற்கு வங்கக் கடலில் நிலவி வந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆனால், தற்போதைக்கு இது புயலாக மாறுமா என்பது குறித்த எந்தத் தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.