கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனுக்கு வேறு திட்டம் இருப்பதால்தான், அவர் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: அரசியலமைப்புச் சட்டத்தையும், அம்பேத்கரையும் புகழ்ந்துகொண்டே, அரசியலமைப்புச் சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. 375-வது சட்டப் பிரிவை அமல்படுத்தியது, முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது, 370-வது சட்டப் பிரிவை நீக்கியது, சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தது என இவையெல்லாம் அரசியமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை.
வழிபாட்டுத் தலங்களுக்கான சட்டத்தை அவமதிக்கும் வகையில் ராமர் கோயில் கட்டினர். இந்த ஆபத்தைத் தடுக்க, தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும். இதுகுறித்த விவாதத்தில் நாடாளுமன்றத்தில் எனது கருத்துகளைப் பதிவு செய்ய முயன்றபோது, என்னை அனுமதிக்கவில்லை.
தமிழக அரசு வெள்ள நிவாரணமாக ரூ.2,475 கோடி கேட்ட நிலையில், மத்திய அரசோ ரூ.944.80 கோடியை கொடுத்தது. தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். அண்மையில் நேரிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும்.
» ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார் தமிழக டிஜிபி மகள்
» புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா விநியோகம்: சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்
அரசியலுக்காகத்தான் கூட்டணிக் கட்சிகளை திமுக பயன்படுத்துகிறது என்ற தவாக தலைவர் வேல்முருகனின் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது மட்டுமின்றி, ஜனநாயகத்துக்கு எதிரானது.
ஆதவ் அர்ஜுன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சூழலில், முரண்பாடான கருத்துகளைக் கூறுவது தவறு. 6 மாதங்களுக்குப் பிறகு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால், அவர் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு வேறு செயல் திட்டம் இருப்பதால்தான், இதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து பேசி வருகிறார். இவ்வாறு திருமாவளவன் கூறினா்.