கொடைக்கானல் | மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்: துண்டிக்கப்பட்ட கீழானவயல் மலைகிராமம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கீழானவயல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். விரைந்து சீரமைக்க கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இதனால் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. உபரிநீர் நீரோடைகள் வழியாக வெளியேறி வருகின்றன. கொடைக்கானலில் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழானவயல் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மட்டும் பிரதான தொழிலாக உள்ளது.

விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இப்பகுதியில் புலி பிடித்தான் கானல் நீர்தேக்கம் உள்ளது. தொடர் மழை காரணமாக புலி பிடித்தான்கானல் நீர்த்தேக்கம் நிரம்பியது. அதிக நீர்வரத்தால் நீர்த்தேக்கத்தின் கரை உடைந்து கீழான வயல் பகுதிக்கு செல்லக் கூடிய சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடியது. இதில் தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. காட்டாற்று வெள்ளத்தில் மரங்கள் அடித்து வரப்பட்டது. சாலை துண்டிப்பால் கீழான வயல் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைவித்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களும் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக இந்த கிராமத்தில் ஒரு வாரமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், விரைந்து செயல்பட்டு தரைப் பாலத்தை சீரமைத்து முதலில் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். புலி பிடித்தான் கானல் நீர்த்தேக்க கரையை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கீழானவயல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த கொடைக்கானல் கீழானவயல் மலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE