கரூர்: மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியில் ரூ.28.01 லட்சத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
கரூர் அருகேயுள்ள மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி அலுவலகம் ரூ.28.01 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (டிச.15ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து ஆட்சியர் மீ.தங்கவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றினர்.
» அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
» தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்: நெல்லை மாவட்ட கனமழை பாதிப்பு நிலவரம் என்ன?
அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய அலுவலகத்தை பார்வையிட்டு பேசியது: ''ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டம் தொடர்பான கோரிக்கை நிறைவேற்றப்படும். மக்களின் கோரிக்கைகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும்'' என்றார்.
மேலும் அங்கு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிற்றுண்டி அருந்தினார். ரூ.19.38 லட்சத்தில் கருங்கல் காலனியில் அமைக்கப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்: மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் படங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படம் இடம்பெற்றிருந்தது.
மாநகராட்சியில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி: கரூர் மாநகராட்சி 38வது வார்டு காந்திகிராமம் மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். 38வது வார்டு உறுப்பினரும் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான ஆர்.எஸ்.ராஜா வரவேற்றார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது: ''கரூர் மாநகராட்சியில் வார்டு வாரியாக சாலைகள் அமைக்கவேண்டிய இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு ரூ.12 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குடிநீர் திட்டப்பணிகள் ரூ.7 கோடியில் மேற்கொள்ளப்படும். தொடர்ச்சியாக 48 வார்டுகளிலும் தேவையான பணிகளை மேற்கொள்ள அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வார்டில் ரூ.2.42 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.82 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.1.98 கோடியில் கூடுதல் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ஆய்வு: தொடர்ந்து 19வது வார்டு கொளந்தானூர் பகுதியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டு கொளந்தானூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.16.82 கோடியில் கட்டப்பட்டுவரும் அடுக்கு மாடி குடியிருப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிரு ஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் ப.சரவணன், கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, கரூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.