தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்: நெல்லை மாவட்ட கனமழை பாதிப்பு நிலவரம் என்ன?

By KU BUREAU

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாமிரபரணியில் நேற்று 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு இருந்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் மிதமான சாரல் மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், அணைப்பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 1,377.80 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான ஊத்து பகுதியில் மட்டும் 235 மி.மீ. மழை பெய்திருந்தது.

பிற இடங்களில் மழையளவு (மி.மீட்டரில்): நாலுமுக்கு- 220, காக்காச்சி- 192, மாஞ்சோலை- 179, நம்பியாறு- 3, மூலைக்கரைப்பட்டி- 5, கொடுமுடியாறு அணை- 22, களக்காடு- 13.40, கன்னடியன் அணைக்கட்டு- 50.40, சேர்வலாறு அணை- 137, திருநெல்வேலி- 9, பாபநாசம்- 149, பாளையங்கோட்டை- 17.60, நாங்குநேரி- 3, மணிமுத்தாறு- 94.80, சேரன்மகாதேவி- 15.60, அம்பாசமுத்திரம்- 32.

2,400 கன அடி நீர் திறப்பு: 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 91 அடி, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் 82 அடி தண்ணீர் உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,813 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2.413 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு 3,485 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து மொத்தம் 2,400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் பாயும் இந்த தண்ணீருடன் தென்காசி மாவட்டம் கடனா, ராமநதி ஆற்று வெள்ளம் சேர்வதாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று காலையில் சென்று கொண்டிருந்தது.

இதனால் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்தோடுவதால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வெளியேற்றம்: முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலியில் கைலாசபுரம், மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் குறுக்குத்துறை முருகன் கோயிலின் மண்டபம் மூழ்கிய நிலையில் உள்ளது.

இதனால் உற்சவர் சிலை கரையில் உள்ள மேலகோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடைபெற்று வருகிறது. வெள்ளங்குளியில் உள்ள தாமிரபரணி, கருமேனியாறு -நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாயில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கூடல் பகுதியில் பேரிடர் குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் கூடுதாழை, உவரி, இடிந்தகரை, கூத்தன் குழி ,பெருமணல், உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சார்ந்த 8 ஆயிரம் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பகுதிகள், திருநெல்வேலி டவுன், காட்சி மண்டபம், பேட்டை பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா தெரிவித்தார்.

இதனிடையே திருநெல்வேலியி்ல் மீட்பு பணி மேற்கொள்ள 30 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலையில் வந்து சேர்ந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ள கால்நடைகள் போன்றவற்றை மீட்கவும் தயாராக உள்ளதாக இப்படையின் ஆய்வாளர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

மழை நீடிக்கும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுவதற்காக முதல் கட்டமாக திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி மீனவ கிராமத்தில் இருந்து 30 மீனவர்கள் அடங்கிய குழுவினர் படகுகளுடன் வரவழைக்கப்பட்டு மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

1,327 ஹெக்டேரில் பாதிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள் கனமழையால் 1,327 ஹெக்டேரில் நெல் மற்றும் பயறு வகை பயிர்கள் நீரில் மூழ்கயுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரை 1,117 ஹெக்டேரில் நெற்பயிர்களும், 210 ஹெக்டேரில் பயறுவகை பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுபோல் 159.40 ஹெக்டேரில் வாழை பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

65 ஹெக்டேரில் வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நேற்று காலை 7 மணி வரையில் 7 குடிசைகள் முழுமையாகவும், 12 குடிசைகள் பகுதியளவும், 7 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE