முக்கொம்பில் நீர் வரத்து அதிகரிப்பு: உடைப்புகளை அடைக்க 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: முக்கொம்பு மேலணைக்கு சனிக்கிழமை (டிச.14) இரவு 9 மணி நிலவரப்படி 41 ஆயிரம் கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகள் மற்றும் காவிரி பாசன வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை அடைப்பதற்காக 10 ஆயிரம் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி ஆறு காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டு ஆறுகளாக பிரிந்து செல்கிறது. திருச்சி நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு பாசனக் கோட்டம் கட்டுப்பாட்டில் காவிரி மற்றும் அதிலிருந்து பிரியும் 17 வாய்க்கால்கள் உள்ளன. இதில் 14 வாய்க்கால்கள் திருச்சி மாவட்டத்தில் மட்டும் பாசனத்துக்காக பாய்ந்தோடுகிறது.

காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்காக 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் பாசனத்துக்கான கடந்த 10 நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து 1,000 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆய்வு செய்தார். இந்நிலையில் முக்கொம்பு மேலணைக்கு சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 30,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து இரவு 9 மணியளவில் 50 ஆயிரம் கனஅடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக, மாலை 4 மணிக்கு நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆர்.தயாளகுமார் முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, நடுகாவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சிவகுமார், ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் செயற்பொறியாளர் ஏ.நித்தியானந்தன், உதவி செயற்பொறியாளர் வி.தினேஷ்கண்ணன், உதவி பொறியாளர் பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர். இரவு 9 மணியளவில் 41 ஆயிரம் கனஅடி நீர் வரத்து இருந்தது. அது அப்படியே கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்னும் சில மணி நேரத்தில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு பாசனக் கோட்ட அலுவலர்கள் கூறியது: காவிரி, கொள்ளிடம் மற்றும் காவிரி பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு மற்றும் மழையின் காரணமாக கரைகளில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒருவேளை உடைப்பு ஏற்பட்டால் அதை அடைப்பதற்காக முக்கொம்பில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள், ஆயிரம் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லால்குடி, திருமழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அங்கேயே மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் மழைநீர் வடிந்து வந்து வடிகால்களில் ஆங்காங்கே சில உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. அதையும் கண்காணித்து அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

முழுக் கொள்ளளவை எட்டிய 73 ஏரிகள்: திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆறு மூலம் நிரம்பக்கூடிய ஏரிகள் 75 உள்ளன. இதில் 73 ஏரிகள் 90 முதல் 100 சதவீதம் வரையும், 2 ஏரிகள் 75 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளன. 2 டிஎம்சி வரை கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் தற்போது 1.80 டிஎம்சி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE