கோவில்பட்டி: சிறுவன் மரணத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள் திடீர் சாலை மறியல்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் சிறுவன் மர்ம மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி(10). இவர் கடந்த 9-ம் தேதி காணாமல் போன நிலையில் மறுநாள் (10-ம் தேதி) அதிகாலையில் பக்கத்து வீட்டு மாடியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 36 பேர் வரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் இறந்து 5 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை.

இந்நிலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிறுவனின் தாய் பாலசுந்தரி மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி பிரதான சாலையில் இளையரசனேந்தல் சாலை விலக்கு பகுதியில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE