தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சங்கத்தின் 15-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியை மாநில துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி தொடங்கிவைத்தார். மாநிலத் தலைவர் (பொ) சா.டேனியல் ஜெயசிங் தலைமை வகித்தார். சிஐடியு தேசிய இரா.கருமலையான் மாநாட்டை தொடங்கிவைத்தார். மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்து 1,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
அரசுத் துறைகளில் உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு 42 மாதமாகியும், ஒரு கோரிக்கையைகூட நிறைவேற்றவில்லை.
அரசு ஊழியர்களால்தான் 6-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று கூறும் முதல்வர், எங்களது கோரிக்கைகள் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மேலும், அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
தமிழக முதல்வர் உடனடியாக தனது மவுனத்தை கலைக்க வேண்டும். டிச. 14-ம் தேதிக்குள் (இன்று) நல்ல முடிவை முதல்வர் அறிவிக்காவிட்டால், அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். மாநாடு இன்றும் நடைபெறுகிறது. மாலையில் சிஐடியு தேசிய துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் உரையாற்றுகிறார்.