புதுடெல்லி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவு குறித்து கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவின் டிங் லிரன், இந்தியாவின் குகேஷிடம் 'வேண்டுமென்றே' தோல்வியடைந்ததாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரன், இந்தியாவின் டி குகேஷுக்கு எதிரான 14வது மற்றும் கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். இதனால் குகேஷ் செஸ் விளையாட்டு வரலாற்றில் உலக சாம்பியனான இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். 18 வயதான குகேஷ் சரித்திரம் படைத்ததை இந்தியா கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ், சீனாவின் டிங் லிரன் வேண்டுமென்றே ஆட்டத்தில் தோற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய செய்தி நிறுவனமான TASS, Filatov ஐ மேற்கோள் காட்டி, சர்வதேச செஸ் கூட்டமைப்பை (FIDE) ஒரு விசாரணையைத் திறந்து முடிவை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டது.
இதுபற்றி குற்றம் சாட்டியுள்ள அவர்,"இறுதி ஆட்டத்தின் முடிவு தொழில் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் சீன செஸ் வீரரின் நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியது. எனவே சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) இதில் விசாரணை நடத்த வேண்டும். இன்றைய ஆட்டத்தில் சீன சதுரங்க வீரரின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அவர் வேண்டுமென்றே தோற்றது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது" என்று அவர் குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.