சென்னை: கனமழை பெய்து வரும் தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், எது வந்தாலும், சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி வாயிலாக பேசி கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. அதுதொடர்பாக, ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, அதை மேற்பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப் பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. தென்காசி பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், திருநெல்வேலியில் அமைச்சர் கே.என்.நேருவும் களத்தில் உள்ளனர். மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ள பகுதிகளிலும், ஏரிகள் திறந்துவிடும் பகுதிகளிலும் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.
» நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 5000 கன அடி உபரி நீர் திறப்பு
கரையோரப் பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஃபெஞ்சல் பாதிப்புக்காக மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்துள்ள நிதி போதுமானது அல்ல. மத்திய அரசு தமிழகத்துக்கு பேரிடர் நிதி கொடுக்க வேண்டியதை வலியுறுத்தி ஊடகங்கள் தொடர்ந்து எழுதினால், அதுவே மத்திய அரசுக்கு பெரிய அழுத்தமாக இருக்கும்” என்றார்.