கனமழை: பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 12,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: மழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளனர் நீர்வள ஆதாரத் துறையினர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக-ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்த மழையினால் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது. இச்சூழலில், நேற்று முன்தினம் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழை நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆகவே, பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் நேற்று மதியம் 1.30 மணி முதல் உபரி நீரை திறந்து வருகின்றனர் நீர்வள ஆதாரத் துறையினர். தொடக்கத்தில் விநாடிக்கு ஆயிரம் கன அடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, நேற்று மாலை 5 மணியளவில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு மழைநீர் விநாடிக்கு 12,310 கனஅடி வந்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கிருஷ்ணா நீர் விநாடிக்கு 450 கனஅடி வந்துக் கொண்டிருந்தது. ஆகவே, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,159 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்ட உயரம், 34.97 அடியாகவும் இருந்தது.

எனவே, இன்று காலை 6.30 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளனர் நீர் வள ஆதாரத் துறையினர். மேலும், அவர்கள் ஏரிக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், தாமரைப்பாக்கம், காரனோடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 65 கி.மீ., பயணித்து, எண்ணூர் பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும். ஆகவே, பூண்டி ஏரியில் இருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேறுவதால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப் பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது நீர்வள ஆதாரத்துறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE