திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் திருச்சி சாலையில் நான்கு மாடி கட்டிடத்தில் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. நேற்று இரவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்துச் சிதறி தீப்பற்றியது. தீ மளமளவென மேல்மாடிகளுக்கு பரவியது. மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், உதவியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவு 11 மணி அளவில் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தீ விபத்து நடந்த மருத்துவமனையை பார்வையிட்டனர்.

தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். சிலர் லிப்டில் சிக்கியிருக்கலாம் என தகவல் வந்தது. இதன்பேரில் நடத்திய சோதனையில் சிலர் மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனைக்குள் யாரேனும் இருக்கிறார்களா என தொடர்ந்து சோதனையிட்டு வருகிறோம்’’ என்றார்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 32 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE