ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், உயிர் இழந்த அந்நாட்டு கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 25-ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி படகிலிருந்த மீனவர்கள் முத்துசெட்டி (70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35) மற்றும் வைத்தியநாதன் (45), வானவன்மாதேவி கலைமுருகன் (25), கீச்சாங்குப்பம் கோவிந்தசாமி (60), கடலூர் மணிபாலன் (55) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின்போது, இலங்கை ரோந்துப் படகில் இருந்த அந்நாட்டு கடற்படை வீரர் ரத்நாயக்க, பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்ததில், பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழி யில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, காங்கேசன் துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 10 மீனவர்களில் 9 பேரை மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்தார். விசைப்படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடாக ரூ.35 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
» பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,600 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
» திருநங்கைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்: அமைச்சர் கீதாஜீவன்