மதுரை: கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் திருநங்கைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
மதுரை பசுமலையில் வியாழக்கிழமை (டிச.12) திருநங்கையர் ஆவண மையம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சமூகவியல் துறை சார்பில் திருநங்கைகள் இலக்கிய கலாச்சார பண்பாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தலைவர் ராஜகோபால், கல்லூரி முதல்வர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருநங்கைகள் ஆவண மைய இயக்குநர் பிரியாபாபு வரவேற்றார்.
இவ்விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று திருநங்கைகள் வரைந்த ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது: “திருநங்கை என்ற மரியாதையான, கண்ணியமான சொல்லை ஏற்படுத்தி தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் 2008-ல் திருநங்கைகள் நல வாரியம் ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது வழியில் தற்போதைய முதல்வரும் திருநங்கை, திருநம்பியருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
திருநங்கைகள் உயர்கல்வி கற்கும் வகையில் கல்லூரி படிப்புக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். திருநங்கைகள் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வின்றி வாழ்வதற்கு தமிழக அரசு பல்வேறு வகையிலும் உதவி செய்து வருகிறது. பாலின மாற்று அறுவை சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையில் அதிகளவில் நடைபெறுகிறது. திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” இவ்வாறு கீதா ஜீவன் தெரிவித்தார்.
» சாத்தனூர் அணை அலர்ட் முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
» ரஜினி பிறந்தநாளுக்கு 30 ஆண்டுகளாக இலவசமாக செருப்பு தைத்து கொடுக்கும் தொழிலாளி!
இவ்விழாவில், தமிழ்நாடு பெண்கள் நல ஆணைய தலைவர் குமாரி, சுற்றுலா மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி சமூகவியல் துறை தலைவர் கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தார். முடிவில் திருநங்கை ஆவண மைய நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீவீணா யாழினி நன்றி கூறினார்.