நெல்லையில் சாலையை மறித்து திமுக நடத்த இருந்த விழா - மழையால் வேறு இடத்துக்கு மாற்றம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் சாலையை மறித்து திமுகவினர் நடத்த இருந்த விழா மழையால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக முன்னோடிகள் 1048 பேரை கவுரவிக்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருநெல்வேலி டவுன் பார்வதி திரையரங்கு அருகேயுள்ள அருகே நெல்லை கண்ணன் சாலையை வழிமறித்து திமுகவினர் விழா மேடை, வரவேற்பு வளைவு, கொடித்தோரணங்கள் அமைத்தது, தரை விரிப்புகளை விரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

போக்குவரத்தை முடக்கும் வகையில் விழா நடத்துவதற்கு அதிகாரிகளும், காவல்துறையும் எவ்வாறு அனுமதி வழங்கியது என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து சமூக வலைதளங்களிலும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தன. இந்நிலையில் திருநெல்வேலியில் பகல் முழுக்க பெய்த மழை இரவிலும் நீடித்ததால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இடத்தில் விழாவை நடத்த திமுகவினரால் முடியவில்லை. இதையடுத்து இந்நிகழ்ச்சி வர்த்தக மையத்துக்கு மாற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE