கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய நிர்பந்தம் செய்யப்படுவதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று (டிச. 12ம் தேதி) காலை பணிக்கு வந்தபோது எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பணி செய்ய தயாராக உள்ளவர்கள் மட்டும் பணிக்கு வரவும் என தனியார் ஒப்பந்த நிறுவன நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு இன்று (டிச. 12ம் தேதி) காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாடு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் முன்னேற்ற சங்க (எல்பிஎப்) மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். 2 ஆண்கள் உள்ளிட்ட 26 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

8 மணி நேரத்திற்கு மேலாக வேலை, வாரவிடுப்பு, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம், பிஎப், இஎஸ்ஐ வழங்காததை கண்டித்தும் அவற்றை முறையாக வழங்கக்கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து தொழிலாளர் நல அலுவலர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடமும், தூய்மைப் பணியாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE