திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது பக்தர்கள், பொதுமக்கள் 11 நாட்களும் ஏறுவதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருவண்ணாமலை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 10-ம் நாள் திருவிழாவான மகாதீபத்தன்று அண்ணாமலையார் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைக் காண 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
கடந்த டிச.1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஃபெஞ்சல் கனமழை யினால் அண்ணாமலையார் தீபம் ஏற்றும் மலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையடிவாரத்தில் ஒரே வீட்டில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைக் காண பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வின் அறிக்கையில் மலையில் பெருமழையின் காரணமாக பல இடங்களில் மண்அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவுகளும் பாறைகள் இடம் பெயர்ந்தும், மலை மீது ஏறும் வழிகளில் அதிக அளவில் மண்மூடியும் உள்ளது.
பல இடங்களில் பாறைகள் பெயர்ந்து உருண்டு விழும் நிலையில் உள்ளன. மழையின் காரணமாக மலையில் ஊறிய தண்ணீர் தொடர்ந்து ஊற்றாக வழிந்து கொண்டும் மலையின் உச்சியில் மண் படிவுகள் அதிக ஈரப்பதத்துடன் காணப் படுகிறது. தீபக் கொப்பரை ஏற்றிச்செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் பிடிமானம் இன்றி தனித் தனியே மண் படிமங்கள் மீது உள்ளது என்பதால் மலையின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் அண்ணாமலை மீது இந்தாண்டு வரும் (டிச.13-ம் தேதி) தொடங்கி தீபம் எரியும் 11 நாட்களும் மலையேற அனுமதி இல்லை. மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கமாக செல்லும் கோயில் பணியாளர்கள் மகாதீபம் ஏற்றவும் அவர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் இதர வசதிகளையும் செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் மலை மீது ஏறுவது தடைசெய்யப் படுகிறது. காவல்துறை, வனத்துறையினரால் மலையைச் சுற்றி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலையேறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் மலைமீது ஏற முயற்சிக்க வேண் டாம்’’ என தெரிவித்துள்ளார்.