பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்தவர்கள் மீது வழக்கு தொடர கோரிக்கை: குமரி எஸ்பி பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: பொது இடத்தில் இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் குமரி மாவட்ட எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவஸ்தலத்தைச் சேர்ந்த அஷ்மிகா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "நாங்கள் கல்வெட்டான்குழி பகுதியில் வசிக்கிறோம். எங்களுக்கும் அனீஸ், ஆஷா, எட்வின் ஆகியோருக்கும் சொத்து பிரச்சினை உள்ளது. அருமனைக்கு உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தபோது அனீஸ் என்னிடம் தவறாக நடந்தார். இதை தட்டிக்கேட்டதற்காக என்னை அவரது சகோதரி ஆஷா மற்றும் எட்வின் ஆகியோர் தாக்கினர். இது குறித்து அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

போலீஸார் என் புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்யாமல் என்னை தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டி வருகின்றனர். இது குறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் டிஎஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்தேன். இருப்பினும் அருமனை காவல் ஆய்வாளர் சமரசமாக போகுமாறு மிரட்டி வருகிறார். எனவே என் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட எஸ்பி, மார்த்தாண்டம் டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், இளம் பெண்ணிடம் பொது இடத்தில் தவறாக நடக்க முயன்று தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் சமரசமாக செல்லுமாறு புகார்தாரரரை மிரட்டி வருகின்றனர். இதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் புகார் குறித்து குமரி மாவட்ட எஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE