புதுவை- கடலூர் சாலையில் ரூ.72 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலத்துக்காக பூமி பூஜை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஏஎப்டி ரயில்வே கேட்டில் ரூ. 72 கோடியில் புதுச்சேரி- கடலூர் சாலையில் புதிய ரயில்வே மேம்பாலத்துக்கு பூமிபூஜை இன்று போடப்பட்டது. இதனை ஓராண்டில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் ரயில்வே கிராசிங்கில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வில்லியனுார் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் ஒரு ரயில்வே மேம்பாலமும், 100 அடி சாலை, கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, புதுவை- கடலுார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை இருந்தது.

இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இதற்கு அனுமதியளித்தது. இந்த ரயில்வே மேம்பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி, தெற்கு ரயில்வேயின் ரூ.17 கோடி என மொத்தம் ரூ.72 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று கடலூர் சாலை வணிக வளாகம் முன்பு நடந்தது. அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "புதிய மேம்பாலம் 630 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டதாக 4 வழிப் பாதையுடன் கட்டப்பட உள்ளது. பாலத்தின் இருபுறத்திலும் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது. சுரங்கப் பாதையும், வடிகால் கிணறும் அமைக்கப்பட உள்ளது. பாலம் வணிக வளாகத்தின் அருகில் தொடங்கி, ஆலை வீதிக்கு முன்பாக முடிவடையும்.

வழக்கமாக ரயில்வேத் துறை தண்டவாளத்தின் மேல் உள்ள பகுதியை மட்டும் கட்டுவார்கள். மீதமுள்ள இணைப்பு பாலத்தை மாநில அரசுகள் மேற்கொள்ளும். ஆனால் இந்த பாலத்தில் முழு பணியையும் ரயில்வே துறையே செய்ய உள்ளது. 12 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது." என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE