கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது: தமிழக அரசு அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: 2024ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 30ம் தேதி 2023 ஆண்டு அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூக நீதி நாளான செப்டம்பர் 17ம் நாளன்று தமிழக அரசால் வழங்கப்படும் என்று 110-விதியின் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, 2024ம் ஆண்டுக்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதேவநூர மஹாதேவா-வுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழக முதல்வரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (டிச.12) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE