மனமகிழ் மன்றம் எனும் பெயரில் தனியார் மது விற்பனைக்கு அனுமதி: ரத்து செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை

By KU BUREAU

சென்னை: தமிழக அரசு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு வழங்கப்பட்ட டாஸ்மாக் மது விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மதுவிலக்குக்கு வழி வகுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். குறிப்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவித்த மது இல்லா தமிழகம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் திமுக அரசு இதுவரையில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்யாமல் டாஸ்மாக் கடைகளின் மூலம் மது விற்பனையை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கத் தான் முயற்சி மேற்கொள்கிறது. உதாரணத்திற்கு பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளின் மூலம் விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்யும் அரசாக, விடுமுறை நாட்களில் மது கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.

மேலும் எஃப் எல் டூ (FL2) பார் அதாவது மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிமம் வழங்கியது. எஃப் எல் டூ பாரில் மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்பனை மற்றும் மது அருந்த அனுமதிக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறை சரியாக பின்பற்றப்படுகிறதா எனவும், மது பிரியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தேவையா.

அதாவது டாஸ்மாக் கடைகளை மூடும் நோக்கில் மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்கியதாக கூறும் அரசு, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும் குறைக்காமல், தனியாருக்கு மது விற்பனைக்கு வழி வகுத்து, மது விற்பனையை அதிகரித்து, தனியாரையும் மது விற்பனையில் ஊக்குவிப்பது தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து இப்படியா மது விற்பனையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்வது. மதுவும் போதையே.

இந்நிலையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று தமிழக அரசு உறுதிமொழி ஏற்றுள்ளதை என்ன வென்று சொல்வது. தமிழக அரசே, மதுவால் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் என பலதரப்பட்டவர்களும் உடல் அளவில், மனதளவில் பாதிக்கப்பட்டு சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பதை ஊடகச் செய்திகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இச்சூழலில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் வட்டார பேரூராட்சி பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க FL2 என்ற பெயரில் தனி நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது மதுக்குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருங்கால சமுதாயம் சீரழியவும், சட்டம் ஒழுங்கு சீர்கெடவும் வழி வகுக்கிறது.

எனவே மனமகிழ் மன்றம் மூலம் மதுக்கடைகளைத் திறக்க இனி தனி நபர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும். மேலும் தமிழக அரசு மனமகிழ் என்ற பெயரில் தனியாருக்கு வழங்கப்பட்ட டாஸ்மாக் மது விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுவிலக்குக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்’ என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE