தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்: அதிமுக கோரிக்கையை ஏற்று முதல்வர் உடனடி அறிவிப்பு

By KU BUREAU

‘‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்’’ என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி கோரிக்கை எழுப்பிய உடனேயே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, வேப்பனஹள்ளி தொகுதி அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, ‘‘ தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அரசு கொண்டாட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

கேள்வி நேரம் தொடரப்பட்ட நிலையில், திடீரென குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘‘ உறுப்பினர் கே.பி.முனுசாமி இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சரும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று கோரிக்கை வைத்து, முதல்வரும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுள்ளார். அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலகட்டங்களில் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்.’’ என அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE