சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த முக்கிய பிரமுகர்கள் யார்? - அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் கோரிக்கை

By KU BUREAU

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட வழக்கு விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தஅந்த இருவர் யார் என்பது குறித்தும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரியும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரியும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

யூடியூபரான சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கு தொடர்பாக அதீத அதிகாரமிக்க இருவர் தன்னை சந்தித்து வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால்தான் இந்த வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்ததாகவும் உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த இருவர் மீதும் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நீதி பரிபாலனத்தில் தலையிட்டு நீதிபதிக்கே அழுத்தம் கொடுக்கும் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவில் தனக்கு அழுத்தம் கொடுத்த அந்த இருவர் யார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்காததால், அந்த இருவர் யார் என்பது குறித்தும், அவர்களை தூதுவர்களாக அனுப்பி வைத்தது யார் என்பது குறித்தும் கண்டறியும் வகையில் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என அதில் கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE