கன்னியாகுமரியைத் தொடர்ந்து மதுரையிலும் சார் பதிவாளர் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்!

By KU BUREAU

கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி நடைபெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து மதுரையிலும் சார் பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரப் பதிவு ஆவணத்தை நிராகரித்ததாக கூறி சார் பதிவாளர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திலும் பத்திரத்தை பதிவு செய்ய மறுத்ததாக கூறி மற்றொரு சார் பதிவாளர் மீதும் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி காவலர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் வரிசையில் தற்போது நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சார் பதிவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் ஒட்டுமொத்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசு அதிகாரிகளின் மீது இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE