மாநகராட்சி வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கோரிக்கை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: மாநகராட்சி வரி உயர்வை மாநில அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என திருப்பூரில் எம்பி சுப்பராயன் திருப்பூரில் இன்று (டிச.9) கூறியுள்ளார்.

திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "சமீப நாட்களில் திருப்பூரில் சொத்து வரி, குப்பை வரி அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து இருக்கிறது. மக்களுக்கு துன்புறுத்தும் வகையில், மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது முழு உண்மை. மத்திய 15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் நகர் மற்றும் கிராமப் புற பகுதிகளில் மானியம் கொடுக்க வெண்டும் என்றால், வரி உயர்வை அதிகப்படுத்தினால் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்க முடியும் என்று, மத்திய அரசு அழுத்தம் தருகிறது. இதனால் மாநில அரசு வரி உயர்வை செய்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லடம் சாலையில் ரூ.11,895 கட்டிய வரி, தற்போதைய புதிய வரியால் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 27வது வார்டில் ரூ.1,170 கட்டி வந்தவர்கள் இன்றைக்கு 60 ஆயிரத்து 35 ஆயிரத்து 335 ஆக உயர்த்தி உள்ளனர். இப்படி பல இடங்களில் பாதிப்பு உள்ளது. பனியன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிப்பை சந்திக்கின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி வரி உயர்வை மாநில அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

முதல்வர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். மழை, வெள்ளம், புயல் பாதிப்புக்கு எந்த உதவியும் மத்திய அரசு செய்வதில்லை. பெரு முதலாளிகள் பாதிப்பால் வரி உயர்வை நாங்கள் சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் எந்தவொரு கருத்தும் விமர்சனத்துக்குரியது தான். அது ஏற்கத்தக்கதல்ல. வரி உயர்வுக்கு எதிராக மாநில அரசு எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு நிர்பந்திக்கிறது. நிர்பந்தத்துக்கு இரையாவது தவறு” என்று எம்.பி. சுப்பராயன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE