புதுச்சேரி: புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தருவதற்காக லாட்டரி மார்டின் மகன் ஜோஸ் சார்லஸுக்கு கட்-அவுட்டை பாஜக, ஆதரவு சுயேட்சைகள் வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. நகரப் பகுதிகளில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசு தரப்பில் ரூ.5 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸையும் பாஜக எம்எல்ஏக்கள் களம் இறக்கியுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி இருந்தாலும் பாஜக எம்எல்ஏ-க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாண சுந்தரம், பாஜக ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், அசோக் ஆகியோர் தங்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட ஏதும் பதவிகள் தராததால் ரங்கசாமி மீது கட்சித் தலைமையில் மட்டுமின்றி டெல்லி சென்றும் புகார் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தற்போது தனி அணியாக செயல்படுகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பொதுத்தேர்வில் வென்றோருக்கு காமராஜர் நகர் எம்எல்ஏ ஜான்குமார் பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு சார்லஸ் மார்டினை அழைத்து வந்திருந்தார். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பாஜக மார்ட்டின் அணி தயாராகி வருகிறது. நகரில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
அதில் மார்டின் மகனான சார்லஸ் படத்தில் மார்டின் குருப் என அச்சிடப்பட்டுள்ளது. அதில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றி என்று குறிப்பிட்டு கீழே பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் ஆறுபேரின் படங்கள் போடப்பட்டுள்ளது.
» குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ஊழியர்களின் உழைப்பை 15 ஆண்டுகளாக உறிஞ்சும் கொடுமை: சீமான் வேதனை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில தொகுதிகளை குறிவைத்து இந்நிவாரண உதவி தரப்படவுள்ளது. அதே நேரத்தில் பாஜக எம்எல்ஏ-க்கள் வைத்துள்ள பேனரில் பாஜக தலைவர்கள், புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் என யாரின் பெயரோ, படமோ இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.