நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதாவை ஆதரித்துவிட்டு இங்கே வந்து நடிக்கிறார் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

By KU BUREAU

சென்னை: சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் எடப்பாடி பழனிசாமி நடிக்கிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரை அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்போது முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் தனித் தீர்மானம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'இவ்விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்.பி.க்கள் எதிர்த்திருக்கலாம். பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை” என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. திமுக ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தைத் தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்மைச்ராக இருக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார். இதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான அரசின் தனி தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்த சூழலில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமவள மசோதாவை ஆதரித்துன் பேசும் அதிமுக எம்.பி தம்பிதுரையின் வீடியோ இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!’ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE