செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமையூர் முதல்நிலை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இந்த 9 வார்டுகளில் ராமகிருஷ்ணா நகர், ஆண்டாள் நகர், நியூ காலனி, பவானி நகர், கந்தவேல் நகர், அக் ஷயா நகர், கிரீன் லேண்ட் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில், அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021 - 2022ன் கீழ் கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என பெயர் பலகை ஊராட்சி மன்ற கட்டிடத்தில் வரையப்பட்ட நிலையில் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக சாலையில் நீர்தேங்கி கொசுக்கள் பெருக்கத்துக்கான குட்டைகளாக காணப்படுகின்றன.
முறையான மழைநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதியின்றி சாலையில் கழிவு நீர் செல்லும் அவலம் உள்ளது. குப்பைகளை அகற்றி கொட்டுவதற்கான போதிய இடமில்லாத காரணத்தால் ஆங்காங்கே குப்பைகளும், ஊராட்சி முழுவதும் பன்றிகள் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து முருகன் என்பவர் கூறியது: எங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சாக்கடை கழிவுகள் சாலையில் சென்று சுகாதாரகேடு ஏற்படுகிறது. குப்பைகளை சரியாக அள்ளுவதில்லை. மழைநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் மழைநீர் தேங்குகிறது. கிராமங்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
» குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ஊழியர்களின் உழைப்பை 15 ஆண்டுகளாக உறிஞ்சும் கொடுமை: சீமான் வேதனை
» அரியலூர்: மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி உடல்நல பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் இரவில் தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஊராட்சியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அல்லல்படுகிறோம்.
மேலமையூர், குண்டூர், ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்றி தொல்லை அதிகரித்து வருகிறது. இவை திறந்தவெளியில் திரிவதால், கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து எழுந்து சகதியாக தெருக்களில் வருகின்றன. இதன் காரணமாக, குழந்தைகள் தெருக்களில் விளையாட அச்சப்படுகின்றனர். குப்பையை கிளறுவதால் அவை காற்றில் பரவுகின்றன. சாலைகளில் அடிக்கடி குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிகாயமடைந்து வருகின்றனர்.
இதை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. எனவே இப்பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார். திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன் சிந்தியா சரவணனிடம் இதுகுறித்து கேட்டபோது, செங்கல்பட்டு நகரையொட்டி அமைந்துள்ள ஊராட்சி என்பதால் இங்கு அதிக மக்கள்தொகை உள்ளது.
எனினும், ஊராட்சிக்கு போதிய வருமானம் இல்லையென்பதால் அனைத்து பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஊரக வளர்ச்சி அதிகாரிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.