புதுச்சேரி: மழை வெள்ளப் பாதிப்பு புதுச்சேரியில் அதிகமாக உள்ளது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிப்போம் என்று மத்திய குழுவினர் கூறியுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுவையை மத்திய குழு 2 நாட்களாக பார்வையிட்டது. இன்று பிற்பகல் புதுவையை பார்வையிட்ட 2 குழுவும் ஓட்டல் அக்கார்டுக்கு திரும்பியது. அங்கிருந்த கருத்தரங்கு அறையில் வெள்ள சேதங்களை விளக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் சரத் சவுகான், அரசு செயலர்கள் மோரே, பங்கஜ் குமார், கேசவன், முத்தம்மா, நெடுஞ் செழியன், ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அரசு துறை இயக்குனர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் 60 பட காட்சிகள் மூலம் வெள்ள சேதங்களை மத்திய குழுவினருக்கு அதிகாரிகள் விளக்கினர். சில படங்களுக்கு மத்திய குழுவினர் விளக்கம் கேட்டனர். அதிகாரிகள் அதற்கு விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து மத்திய குழு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகளவில் உள்ளது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிப்போம். அதன் பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று கூறி மத்திய குழு தமிழகத்துக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட அங்கிருந்து புறப்பட்டனர்.