நாகை - இலங்கை இடையே இரண்டாவது கப்பல் இயக்க திட்டம்! 

By கரு.முத்து

நாகை: இந்திய-இலங்கை கடல் வழி கப்பல் பயணத்தை வெளிநாட்டு பயணிகள் அதிகமானோர் பயன்படுத்தி வருவதால், நாகையிலிருந்து, காங்கேசன்துறைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் ஒரு பயணிகள் கப்பல் இயக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியுள்ளது.

இந்த கப்பல் காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும். வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், அதே போல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், அதிக அளவிலான பயணிகள் சென்று வந்ததன் காரணமாக, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு கூடுதலான கப்பல் இயக்க வேண்டும் என இந்திய இலங்கை இருநாட்டு வர்த்தகர்களிடையே கோரிக்கை எழுந்தது.

இதனை பரிசீலித்த சிவகங்கை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம், இந்திய இலங்கை இருநாட்டு வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 250 நபர்கள் பயணிக்க கூடிய வகையில் மேலும் ஒரு புதிய கப்பலை நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு இயக்க திட்டமிட்டுள்ளது.

இதனை நாகையில் நடைபெற்ற நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்க கூட்டத்தில் சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்தது. அப்போது கடல்சார் துறையில் உள்ள வேலை வாய்ப்பு பணிகள், கடல் சார் வர்த்தகம் மற்றும் அதற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து, மாலுமிகள், பொறியாளர்கள் பயனாளர்கள் மத்தியில் நாட்டிலஸ் ஷிப்பிங் நிறுவன கேப்டன், ஆர்.கே.சிங் மற்றும் சுபம் கப்பல் நிறுவன பொறுப்பாளர் கீதா ராஜராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

மேலும் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சியை முடித்த உள்ளூர் கடலோடிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக கப்பல்களில் வேலை வாய்ப்பை வழங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE