கொடைக்கானல் மலைகிராமம்: கோயில் திருவிழாவில் சேற்றை பூசிக்கொண்டு வழிபட்ட மக்கள்

By பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைகிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோயில் திருவிழாவில் மக்கள், சேற்றை தங்கள் உடலில் பூசிக்கொண்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ளது தாண்டிக்குடி மலைகிராமம். இங்குள்ள முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழாவில் முதல்நாள் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திகடனாக உடலில் சேற்றைப் பூசிக்கொண்டு வலம் வந்து அம்மமனை தரிசிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடலில் சேற்றை பூசிக்கொண்டும், ஒருவர் மீது ஒருவர் சேற்றை அடித்தும், தலையில் மண்களை வைத்து அதில் செடியினை வைத்து கொண்டும் கிராமத் தெருக்களில் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

சேற்றை உடலில் பூசி வேண்டுவதால் தங்களுக்கு நோய்கள் வருவதில்லை என்பது கிராம மக்கள் நம்பிக்கையாக உள்ளது. தாண்டிக்குடி மற்றும் இதனை சுற்றியுள்ள மலைகிராமங்களான மங்களம்கொம்பு, பட்லாங்காடு, கொடலங்காடு, பண்ணைக்காடு, அரசன்கொடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக திருவிழாவில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE