தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம்: டிடிவி தினகரன் கண்டனம்

By KU BUREAU

கரூர்: மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது, கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தன்னலம் கருதாமல், நேர காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாக கூட பார்க்கும் மனநிலை இல்லாத திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: “கரூரில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது, கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தன்னலம் கருதாமல், நேர காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாக கூட பார்க்கும் மனநிலை இல்லாத திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்க முன்வராத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்வதாலும், அவ்வப்போது புகழ்ந்து பேசுவதாலும் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லை.

எனவே, தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இனிவரும் காலங்களில் உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE