» கேள்விகளுக்கு பதில்தர வேண்டியது அரசின் கடமை: செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்
» தற்காலிக அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து நழுவ முடியாது: திருமாவளவன் உறுதி
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, முதல்கட்ட நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்வதற்காக கடந்த 5-ம் தேதி வனத் துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி, முன்னாள் எம்.பி. கவுதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்றனர்.
இருவேல்பட்டு கிராம மக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பியபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆராவமுது மகள் விஜயராணி மற்றும் உறவினர் ராமர் (எ) ராமகிருஷ்ணன் இருவரும் சேர்ந்து, அங்கிருந்த சேற்றை எடுத்து அமைச்சர் மீது வீசினர். இதையடுத்து, அமைச்சரின் பாதுகாவலரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் கொடுத்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, மரியாதைக் குறைவாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக உறுப்பினர்? சேறு வீசிய விஜயராணி பாஜகவைச் சேர்ந்தவர் என்று அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் உறுதிப்படுத்தியுள்ளார். உடனிருந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் திமுக உறுப்பினர் என்று கூறப்படுகிறது.
எனினும், இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஆளும்கட்சி தரப்பில் கூறியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.