கும்பகோணத்தில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் நாதன் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி சரஸ்வதி (66). இந்த தம்பதியினருக்கு சங்கரலிங்கம்(35), ராஜ்குமார்(29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சங்கரலிங்கம் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர், கும்பகோணத்தை அடுத்த கோணூரைச் சேர்ந்த பிரேமிளாமேரி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ராஜ்குமார், சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர், தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். பிரேமிளாமேரியின் தந்தை ஜோஸ்வின் வின்சென்ட்ராஜ் தனது மகளிடம் தினமும் செல்போனில் பேசுவது வழக்கம். இந்தநிலையில்,6-ம் தேதி இரவு ஜோஸ்வின் வின்சென்ட்ராஜ், மகள் பிரேமிளாமேரியிடம் பேசும் போது சரியாகப் பேசலில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஜோஸ்வின் வின்சென்ட் ராஜ், காலை தனது மகள் பார்ப்பதற்காக சென்றவர், அவரது வீட்டின் கதவைத் தட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு கதவை திறந்த, பிரேமிளாமேரி, அழுதுகொண்டே கொண்டே தனது தந்தையிடம், ''கணவர் வீட்டில் கடன் அளவுக்கதிமாகி விட்டது, கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்கின்றனர். அதனால், நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதற்காக குடும்பத்துடன் எலி மருந்து தின்று விட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோஸ்வின் வின்சென்ட் ராஜ், அவர்கள் 4 பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனை கொண்டுச் சென்றார். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேற்கு போலீஸார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி கொண்டது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE