ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு: தங்கம் தென்னரசு விளக்கம்

By KU BUREAU

சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்கு தொகை ரூ. 944 கோடியை விடுவித்துள்ளது. மத்திய அரசு தற்போது விடுவித்துள்ள மாநில பேரிடர் நிவாரண நிதித் தொகையை, ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகத் தவறான பிம்பம் பரப்பப்பட்டு வருகிறது என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்கு தொகை ரூ. 944 கோடியை விடுவித்துள்ளது. இந்த நிதியானது 15-வது நிதிக்குழு பரிந்துரையின் படி, அனைத்து மாநிலங்களுக்கும் சட்டப்படியாக விடுவிக்க வேண்டிய நிதி. அதன் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்குத்தொகை 2021-2022-ம் ஆண்டில் ரூ.816 கோடியும், 2022 - 2023-ம் ஆண்டில் ரூ. 856 கோடியும், 2023- 2024-ம் ஆண்டில் ரூ.900 கோடியை விடுவித்துள்ளது.

2024-2025-ம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்குத்தொகையான ரூ. 944.80 கோடியைத் தான் ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ளது. இந்தத் தொகையானது கடந்த ஜூன் மாதத்திலேயே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியது. காலம் தாழ்த்தப்பட்டு தற்போது தான் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாநிலங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஏற்பட்ட பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக மாநில அரசுக்கு ரூ. 37,906 கோடி தர ஒன்றிய அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், ஒன்றிய அரசிடம் இருந்து நாம் பெற்றது அதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான தொகைதான். அதாவது, ரூ.276 கோடி மட்டுமே.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 14 மாவட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஒன்றிய அரசு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 6,675 கோடியை விடுவிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ள மாநில பேரிடர் நிவாரண நிதித் தொகையை ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகத் தவறான பிம்பம் பரப்பப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான பங்குத்தொகையை தவிர, கடந்த மூன்றாண்டுகளில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நாம் பெற்றது ரூ.276 கோடி மட்டுமே!

எனவே ஒன்றிய அரசு, துயர் சூழ்ந்த இந்த வேளையில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணத் தொகையினை வழங்கிட வேண்டுமெனக் கோருகின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE