திருமாவளவனை போல விஜய் ஏமாறக் கூடாது: தமிழக பாஜக அறிவுரை

By துரை விஜயராஜ்

சென்னை: நல்லவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும், திருமாவளவனை போல நடிகர் விஜய்யும் ஏமாந்து விடக்கூடாது என்றும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜூனா குறித்து காணொளி காட்சியில், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவின் வெற்றிக்கும், தமிழகத்தில் தற்போதைய மன்னர் ஆட்சி முறைக்கும் திமுக அரசு அமைய காரணமாக துடிப்புடன் செயலாற்றிய முக்கியமான கருவி ஆதவ் அர்ஜுனா எனவும் மறைமுகமாக கூறி புகழாரம் சூட்டியிருந்தனர்.

மேலும் அதேமேடையில், ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில் இனி தமிழகத்தில் திமுகவின் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். 2026-ல் மீண்டும் திமுகவின் மன்னராட்சி அமையக்கூடாது என்று மிக சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். 2021-ல் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிபெற பணியாற்றி விட்டு, 2026-ல் உதயநிதி முதல்வர் ஆகக்கூடாது என்று பொய் பேசுவதில் பெரும் குழப்பமும், தமிழக அரசியலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற நல்ல இயக்கங்களை சிதைக்க வேண்டும் என்ற சதியும் உள்ளது என்பதை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் கொள்கைகளை கோட்பாடுகளை வாழ்வியல் நெறிகளை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதற்கு நல்லவர்களோடு இணைந்து விஜய் செயல்பட வேண்டும். திருமாவளவன் ஏமாந்தது போல், சகோதரர் விஜய் ஏமாந்து விடக்கூடாது. பாஜக இரண்டு பர்ஸன்ட் கட்சி அல்ல. 12 கோடி மக்களின் இதயங்களை இணைத்து உலகின் மிகப்பெரிய கட்சியாக செயல்பட்டு இந்தியாவை ஆளுகின்ற கட்சி என்பதை ஆதவ் அர்ஜூனா உணர வேண்டும்.

பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் ஆதவ் அர்ஜூனா செய்த நடவடிக்கைகளை, தமிழக மக்களின் முன்னே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும். தமிழகத்தில் மக்கள் விரோத திமுக அரசை, தீய சக்தி திமுக கூட்டணியை வீழ்த்துகின்ற பணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வனே தன் கடமையை செய்து முடிப்பார்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE