கும்பகோணம்: கல்லூரிகளுக்கு மாவட்ட அளவில் நிதி ஒதுக்கீடு இல்லையா? என்ற கேள்விக்கு தமிழக அமைச்சர் கோவி.செழியன் பதில் அளித்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளில் வகுப்பறை கட்டிடங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், ரேசன் கடை, சமத்துவ கூடம், கிராம ஊராட்சி அலுவலகங்கள் 9 கட்டிடங்கள் என மொத்தம் ரூ. 2 கோடியே 68 லட்சம் செலவில் புதியதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.
தத்துவாஞ்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவிடைமருதூர் தொகுதியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் 6 மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு மாவட்ட அளவில் நிதி ஒதுக்கப்பட வில்லை என்ற செய்தி பரவலான கருத்தாக இருந்தாலும் கூட, அந்தந்த பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் உரியத் தொகை, உரிய தேவைக்கேற்ப வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. தேவையான கோரிக்கைகளை, தேவையான வகையில் செய்து முடிப்பதற்கான பணிகளை உயர் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது.
» 200 தொகுதிகளில் வெல்வோம் என இறுமாப்போடு சொல்கிறேன்: விஜய்க்கு கனிமொழி பதிலடி
» காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்
இன்னும் பல கல்வி முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கான பணிகளை அக்கறையோடு செயல்பட்டு வருகின்றோம். முதுகலை மற்றும் முனைவர் பட்டம் போன்றவைகள் எல்லாம் பெரும்பாலான கல்லூரிகளில், தமிழ்த்துறைத் தவிர ஆங்கில வழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆய்வுகளை தமிழில் மேற்கொள்ளலாம் என அவர்கள் கேட்டால், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம், கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. மேலும், மாணவர்கள் ஆங்கில வழி ஆய்வு இல்லாமல் தமிழில் கேட்டால், அதற்கான அனுமதியை உயர் கல்வித்துறை மூலம் கல்லூரிகளுக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் அரசுப் போக்குவரத்துக் கழக சார்பில் கும்பகோணத்தில் இருந்து கோணுளாம்பள்ளம் வரை இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்தை, வேட்டமங்கலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என அந்த கிராம பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று காலை மற்றும் மாலை என 2 நடை இயக்கத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.