மேட்டூர் மின்வாரிய தொழிற்சாலை ஊழியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் மின்சார வாரிய தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்து விட்டு, தொழிற்சாலை மூடுவதற்கான பணிகள் நடப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை கட்டுவதற்காக, அப்பகுதியில் ஆங்கிலேயே அரசு தளவாட பொருட்களை வைக்கவும், மூலப்பொருட்கள் கொண்டு உதிரி பாகங்கள் தயாரிக்கவும் 1926-ம் ஆண்டு தொழிற்சாலையை அமைத்தனர். பின்னர், சுதந்திரம் கிடைத்த பிறகு அப்பகுதியை பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 1957-ம் ஆண்டு மின்சார வாரியத்திற்கு உதரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக முதல் முதலாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேட்டூர் தொழிற்சாலையை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, வேலூர் என மொத்தமாக 8 இடங்களில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான தொழிற்சாலை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மேட்டூர் மின்சார வாரிய தொழிற்சாலையில் 53 வகையான மின் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. புதியதாக உற்பத்தி செய்யாமல், சேதமடைந்து வரும் பொருட்களை சரிசெய்து வரும் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் மின்சார வாரிய தொழிற்சாலையில் 200 ஊழியர்கள் பணியாற்றும் வரும் நிலையில், அங்குள்ள ஊழியர்களை மேட்டூர் அல்லது அருகில் உள்ள இடங்களுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம் என தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் லிமிடெட் அறிவுறுத்தியுள்ளது. தற்போது, ஊழியர்களை இடமாற்றம் செய்ய மின்சார வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியம் ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் தொழிலாளர்கள் சம்மேளம் மாநில இணை செயலாளர் தாமஸ் செல்வம் கூறியது: மேட்டூர் மின்சார வாரிய தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு இடத்தில் பணிபுரிய விருப்பமில்லை. தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அங்கு என்ன பணி செய்ய முடியும். ஊழியர்களை இடமாற்றம் செய்து விட்டு, தொழிற்சாலையை மூடுவதற்கான பணிகள் நடக்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள 8 தொழிற்சாலைகளில் 7 இடங்கள் மூடப்பட்டுள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சாலை மட்டுமே தான் செயல்பட்டு வருகிறது. எனவே, தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது, தொழிற்சாலையும் மூடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE