குமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் 147 அடி உயர கம்பத்தில் தொடர்ந்து தேசிய கொடி பறக்க நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: குமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் 147 அடி உயர கொடி கம்பத்தில் தொடர்ந்து தேசிய கொடி பறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி விஜயகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில்: "நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது, கடந்த 2022ல் எனது எம்பி நிதியிலிருந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோ பாயிண்ட் 147 அடி உயரத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டது. அந்தக் கம்பத்தில் தற்போது தேசிய கொடி பறக்கவிடுவதில்லை.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 148 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இரண்டாவது உயர கொடிக் கம்பம் முறையாக பராமரிக்கப் படாததால் கொடி பறக்காமல் உள்ளது. கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட்டில் உள்ள 147 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிட உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கொடிக் கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேசிய கொடிக்கு எந்த களங்கமும் ஏற்படாத வகையில் முறையாக பராமரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு பிறகும் 148 அடி உயர கொடிக் கம்பத்தில் தொடர்ந்து தேசிய கொடி பறக்க விடப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத குமரி மாவட்ட ஆட்சியர், பொது பணித்துறை நிர்வாக பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கு விசாரணைக்கு வரும் நாள் மட்டும் தான் அந்தக் கொடி கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படுகிறது. மற்ற நாளில் கொடி ஏற்றப்பட வில்லை. உயர்நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசு தரப்பில், தொடர்ந்து தேசிய கொடி தொடர்ந்து பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தேசிய கொடியை தொடர்ந்து பறக்க விட வேண்டும் என்று உத்தவிட கோரி வழக்கு தாக்கல் செய்யும் அளவுக்கு அதிகாரிகளின் செயல்பாடு இருக்கக்கூடாது. தேசிய கொடி விஷயத்தில் இதுபோல் வழக்கு தாக்கல் செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்காமல் இல்லாமல் இருக்கக்கூடாது. அனைவருக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது. குமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் தொடர்ந்து தேசிய கொடி பறக்கவும், அதை பராமரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE