மதுரையில் சிதைந்து வரும் நீர்நிலை தொல்லியல் சின்னங்கள்: வரலாற்று ஆர்வலர்கள் கவலை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சிறந்த அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகளுடன் மதுரையில் கடந்த காலங்களில் அரசர்களும், மக்களும் நீர்நிலைகளில் உருவாக்கிய பாரம்பரிய மடை தூண்கள், தற்போது சிதைந்து வருவதாக வரலாற்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பருவகால மழை நீரை சேமிக்கும் இடமாக ஏரிகள், பாசன கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் உள்ளன. இந்த நீர் நிலைகளில் இருந்து பாசனத்திற்கு தேவையான நீரினை கொண்டு செல்ல ஏரியின் உள்ளே கருங்கல்லில் 5 அடி உயரத்திற்கு மேல் செவ்வக வடிவில் ஏணி போன்ற அமைப்பில் குமுழி தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த அமைப்பானது தேவையான நீர் மற்றும் ஏரியில் தேங்கியிருக்கும் சகதியினை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த தூணின் பக்கங்களில் மதகு, ஏரியினை கட்டியவர்கள், மதகு எவ்வாறு பிரிக்கப்பட்டது, அதனால் ஏற்படும் பயன்கள் போன்ற பல விவரங்களை கல்வெட்டாக செதுக்கியிருப்பார்கள். அந்த வகையில் இதுபோன்ற குமுழி தூண்கள் மதுரையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பதாகவும், தற்போது சிதைந்து வரும் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “திருவாதவூரில் இருக்கும் மடைத் தூணில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னர் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டதாக அப்போரில் கலந்துகொண்ட மங்கலக் கோன் பாஞ்சால ராஜன் என்ற அதிகாரி இவ்ஊரில் உள்ள பாசன ஏரியில் தன் பெயரில் மடை அமைத்ததை பற்றிய செய்தி உள்ளது. இதே மடைத்தூணில் சோழ நாட்டின் மீது படை எடுத்து வெற்றி கண்ட முதலாம் மாறவர் சுந்தரபாண்டியன் மன்னரின் காலத்தில் பாண்டிய மன்னரின் அதிகாரியான விரதமுடிச்சானான பராக்கிரம சிங்கத்தேவன் இதனை திருத்தி அமைத்ததை பற்றியும் தகவல் உள்ளது.

இந்த மடைத் தூணின் மேல்புறத்தில் குறுக்காக புருஷா மிருகம் என்ற சிற்பம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அரிட்டாபட்டியில் கி.பி 1231-ல் முதலாம் மாறவர் சுந்தரபாண்டியர் காலத்தில் அதிகாரிகள் குளத்திற்கும் வயலுக்கும் நீர் பங்கீடு செய்தது பற்றியும், ஆனையூரில் இருக்கும் மடை கல்வெட்டில் பிள்ளை மாவலி வாணாதராயர் அகம்படி முதலிகளில் பெரியான் உய்ய வந்தானான விக்கிரமசிங்கத்தேவன் என்பவன் ஏரியில் மடை செய்வித்ததை பற்றியும் கருங்காலக்குடி வயலி பாறை பகுதியில் உள்ள ஏரியின் மடைக் கல்லில் உள்ள கல்வெட்டில் அம்மடையினை வத்தலை ராவுத்தர் என்ற இஸ்லாமியர் திருத்தி அமைத்தது பற்றியும் தகவல் உள்ளது.

ஆமூர் மடைதூணில் கிபி ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரின் அதிகாரியாக விளங்கிய கலிதீரனின் தந்தை சாத்தன் என்பவர் பற்றியும், மீனாட்சிபுரம் கண்மாயினை கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் சசிவாகரணத் தட்டான் செய்வித்ததையும் தெரிவிக்கிறது .மேலும் இதே போன்று மடைத் தூண்கள் உறப்பனூர், வெள்ளரிப்பட்டி, நிலையூர், நரசிங்கம், மாங்குளம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

இவ்வாறு அரசர்களும் அதிகாரிகளும் பொதுமக்களும் ஏரிகளை உருவாக்கி அவற்றை பாதுகாத்தது பற்றியும் மடை தூண் கல்வெட்டுகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. அப்படியான சிறந்த அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு கொண்டு ஏற்படுத்தப்பட்ட மடை தூண்கள் அரிட்டாபட்டி போன்ற இடங்களில் சிதைந்து இருப்பது வேதனைக்குரியது. அவற்றை பாதுகாக்க வேண்டும்" என்று சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE