சீமான் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்: வருண்குமார் விவகாரத்தில் அண்ணாமலை கருத்து

By KU BUREAU

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர். எனவே வருண்குமாரின் கருத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை “ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் என்னுடன் ஒன்றாக பயிற்சி பெற்றவர். நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர். ஐபிஎஸ் அதிகாரி மீட்டிங்கில் பலத்தரப்பட்ட விஷயங்கள் பேசுவார்கள். நானும் பல மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறேன். அதில் பேசுவது தனிப்பட்ட கருத்தாக கூட இருக்கலாம். அது மாநில காவல்துறையின் கருத்தாக இருக்க முடியாது.

அரசியல் கட்சி தலைவராக பேச சீமானுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி. அவருடைய அரசியல் தமிழத்திற்கு தேவைப்படுகிறது. இதை பெரிதுபடுத்த வேண்டாம். அவர் சொன்ன கருத்து தமிழக காவல்துறையின் கருத்தாக இருக்க முடியாது. பாஜகவின் கருத்தும் கிடையாது. அவரவர்கள் அவரவர் வேலையை பார்க்கட்டும் என்பது என்னுடைய கருத்து” எனத் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு சண்டிகரில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 5ஆவது மாநாட்டில் பேசிய திருச்சி எஸ்.பி வருண்குமார், "நாம் தமிழர் இயக்கம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். அக்கட்சியால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்று பேசியதுஅரசியல் களத்தில் பரபரப்பாக மாறியது.

இதற்கு நேற்று எதிர்வினையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ வருண்குமார் எதை வைத்து எங்களை பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். தமிழ், தமிழர் என்பது பிரிவினைவாதமா?. தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததே, அப்பொழுது பிரிவினை இயக்கம் என்பது தெரியாதா?. இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE