கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

By KU BUREAU

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2017-ம் ஆண்டு ஏப்.23-ல் கொடநாட்டில் ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது ஓம் பஹதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலுர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு முன்பு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லையே, எதிர் தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE