சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா சென்னையில் இம்மாதம் நடைபெறவுள்ளது.
நகர்ப் புறங்களில் அரியவகை உணவு வகைகளை உண்டு மகிழ விரும்பு மக்கள், அவ்வப்போது அரசு மற்றும் தனியார் மூலம் நடத்தப்படும் உணவு திருவிழாக்களில் ஆவலுடன் கலந்து கொள்வது வழக்கம். இதுபோன்ற உணவுத் திருவிழாக்களில் இடம்பெறும் பல்வேறு வகையான அறுசுவை உணவுகளை குடும்பத்துடன், நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதை பெரும்பாலும் மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் தீவுத்திடலில் நடத்தப்படும் உணவுத் திருவிழாவுக்கு எப்போது வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு வகைகளை நகர்ப்புற மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையில் உணவுத் திருவிழாவை இம்மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெறவுள்ள சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் பெண்கள், அந்தந்த பகுதிகளில் பிரசித்திபெற்ற பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்த உள்ளனர். திணை, சாமை, கேழ்வரகு, பயிர் வகைகள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி ஆகியவற்றில் தயார் செய்யப்பட்ட பலவகை ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் இடம்பெறவுள்ளன.
» அதானியை முதல்வர் சந்தித்ததாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: செந்தில்பாலாஜி எச்சரிக்கை
பொதுமக்கள் அனைவரும் துரித உணவுகளுக்கு பதிலாக, குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், சக்திக்காகவும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெறவுள்ள உணவுத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தார்.